CINEMA
திருட்டுப் புகாரா? சட்டவிரோத சிறைபிடிப்பா?…ஜெயம் ரவி வீட்டில் நள்ளிரவில் நடந்த பூகம்பம்…கதறிய ஊழியர்கள்…சென்னை நீலாங்கரை இல்லத்தில் அதிரடியாக நுழைந்த போலீஸ்…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (ஜெயம் ரவி), கடந்த சில மாதங்களாகவே தனது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த தொடர் சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகிறார். தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இவர்களது பிரிவுக்குப் பாடகி கெனிஷா தான் காரணம் எனப் பேசப்பட்ட நிலையில், இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே வலம் வந்தனர். ஆனால், கடந்த மாதம் பாடகி கெனிஷா திடீரென சமூக ஊடகங்களை விட்டும், ரவி மோகனை விட்டும் பிரிவதாக ஆதங்கத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கண்ணீருடன் செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், தன்னை புரிந்து கொண்ட ஒரே பெண்ணான கெனிஷாவையும் பிரித்துவிட்டதாகக் கூறி, தனக்கு முறைப்படி விவாகரத்து கிடைக்கும் வரை இனி எந்தப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை என உருக்கமாகத் தெரிவித்தார்.
இப்படி ரவியைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு புதிய பூகம்பம் வெடித்துள்ளது. ரவி மோகன் இல்லத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் ஊழியர்களையும், அதில் ஒரு பெண்ணின் மகனான ஒரு சிறுவனையும் அவர் சட்டவிரோதமாகத் தனது வீட்டிற்குள் சிறைபிடித்து வைத்திருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியானது. வேலைக்குச் சென்றவர்கள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர், உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் அதிரடியாக ரவி மோகனின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தியதில், அங்கு அந்த இரண்டு பெண்களும் சிறுவனும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் ரவி தரப்பிடம் விசாரணை நடத்தியபோது, வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் திருடிவிட்டதாகவும், அந்தப் பொருட்களை மீட்பதற்காகவே அவர்களை அங்கு அமர வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்ட நீலாங்கரை போலீசார், திருட்டுப் புகார் இருந்தால் சட்டப்படி போலீசில் தான் புகார் அளிக்க வேண்டுமே தவிர, யாரையும் சட்டவிரோதமாகச் சிறைபிடிக்கக் கூடாது என நடிகருக்கு அறிவுரை கூறி, மூன்று பேரையும் மீட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களைச் சிறைபிடித்ததாகத் தனிப்பட்ட முறையில் புகார் அளித்தால், நடிகர் ரவி மோகன் மீது சட்டப்படி கடுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
