LATEST NEWS
பரபரப்பு: நள்ளிரவில் ரணகளமான சேலம்.. தகரத்தால் மூடப்பட்ட அம்பேத்கர் சிலை.. போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு..! பின்னணி என்ன..?!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் ஊராட்சியில், கடந்த 2020-ஆம் ஆண்டு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக, அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதி முடிவு எடுக்கும் வரை சிலை துணியால் மூடப்பட்டது. இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளாக அந்தச் சிலை திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று திடீரென அந்த அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டதால் இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் சூழல் உருவானது. ஒரு தரப்பினர் சிலையை மீண்டும் மூடக் கோரியும், மற்றொரு தரப்பினர் திறந்த சிலையை மூடக்கூடாது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில், நீதிமன்ற அனுமதி பெறும் வரை அங்குள்ள அம்பேத்கர் சிலை, காமராஜர் சிலை மற்றும் ராஜீவ் காந்தி சிலை ஆகிய மூன்று சிலைகளையும் தற்காலிகமாக தகரம் கொண்டு மூடுவதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அதிகாரிகள் சிலைகளைத் தகரத்தால் மூடும் பணியைத் தொடங்கிய போது, சிலை திறப்பை ஆதரித்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க தீயணைப்பு வாகனத்தின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த மோதலில் பெண் காவலர் உட்பட மூன்று போலீசாரும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த மூன்று பெண்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஒதியத்தூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், பாதுகாப்புக்காக பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
