CINEMA
“இது அப்பட்டமான கோழைத்தனம்..!” இணையப் பக்கிரிகளுக்கு எதிராக… குஷ்புவிற்கு ஆதரவாகப் பாய்ந்த ராதிகா சரத்குமார்..!!!
சமூக வலைத்தளங்களில் தங்களது சுய விளம்பரத்திற்காகவும், பார்வைகளைப் பெறுவதற்காகவும் நடிகை குஷ்புவின் மகள்களைப் பற்றி அவதூறாகவும் அநாகரிகமாகவும் விமர்சித்து வருபவர்களுக்கு குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். “தன் குட்டிகளைப் பாதுகாக்கும் ஒரு காயம்பட்ட புலி நான்; இனிமேலும் என் குடும்பத்தின் மீது வைக்கப்படும் இத்தகைய வக்கிரமான விமர்சனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்” என்று ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். நானும் என் கணவர் சுந்தர் சி-யும் எங்கள் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்துடனும் சுயமரியாதையுடனும் வளர்த்துள்ளோம் என்றும், “ஒரு தாயிடம் விளையாடாதீர்கள்” என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் இந்தத் துணிச்சலான பதிவிற்கு ஆதரவாக மூத்த நடிகை ராதிகா சரத்குமாரும் தனது குரலை உயர்த்தியுள்ளார். கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கான உரிமம் அல்ல என்றும், நகைச்சுவை என்ற பெயரில் ஒரு பிரபலமான பெண்ணின் மகள்களைக் கேலி செய்வது அப்பட்டமான கோழைத்தனம் என்றும் அவர் சாடியுள்ளார். ஒருவருடைய தோற்றம் என்பது அவரது சாதனையோ அல்லது தோல்வியோ அல்ல, அவர்களின் குணமே முக்கியம் என்று குறிப்பிட்ட ராதிகா, குழந்தைகளின் மீதான இத்தகைய தாக்குதல் ஒரு சமூகத்தின் ஒழுக்கத் தோல்வியைக் காட்டுகிறது எனக் கூறி குஷ்புவின் குடும்பத்திற்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு குஷ்புவின் இளைய மகள் ஆனந்திதா, நேர்காணல் ஒன்றில் தான் சிறுவயதிலிருந்தே எதிர்கொண்ட இணைய வழித் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தன்னைத் திருநங்கையோடு ஒப்பிட்டுப் பலர் கேலி செய்வது தன்னை காயப்படுத்துவதாக அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். தற்போது 23 வயதாகும் ஆனந்திதா சுந்தர், ‘பொன்னியின் செல்வன் 2’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியதோடு, ‘டபுள் ஆக்குபென்சி’ என்ற வெப் சீரிஸ் மூலம் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் அறிமுகமாகித் திரைத்துறையில் சாதனை படைத்து வருகிறார். இணையதளத்தில் எல்லையை மீறும் ட்ரோல்களுக்கு எதிராக குஷ்பு மற்றும் ராதிகா எடுத்துள்ள இந்த முடிவு சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.
