LATEST NEWS
விழுப்புரத்தில் போர்க்களமான அதிமுக கூட்டம்..! கார் மீது பயங்கர கல்வீச்சு… சி.வி.சண்முகம் மீது புதிய மாவட்ட செயலாளர் வைத்த அதிரடி புகார்..! இ.பி.எஸ் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை என்ன..?!
விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலத்தில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால், விழுப்புரம் மாவட்ட செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஆர். பசுபதியின் தலைமையில் இக்கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், முன்னாள் அமைச்சரும், முந்தைய மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சி.வி. சண்முகம் தரப்பினர், கூட்ட அரங்கின் நுழைவு வாயில் கதவுகளைப் பூட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தடையை மீறி பசுபதி தரப்பினர் உள்ளே செல்ல முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
அடுத்த சில நிமிடங்களில் இந்த வாக்குவாதம் கட்டுக்கடங்காத அடிதடி மற்றும் ரகளையாக மாறியது. கூட்ட அரங்கில் இருந்த நாற்காலிகள் நாலாபுறமும் பறக்கவிடப்பட்டு, இரு தரப்பு நிர்வாகிகளும் ஒருவரையொருவர் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொண்டனர். இதில் பலருடைய சட்டைகள் கிழிந்து ரத்தக் களறியானது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் திணறிய நிலையில், கூட்டம் முடிந்து மாவட்ட செயலாளர் பசுபதி தனது காரில் புறப்பட்டார். அப்போது சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் அவரது காரை நோக்கிப் பெரிய கருங்கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் குறித்துப் பேசிய பசுபதி, தம்மைக் கொலை செய்யும் நோக்கில் சி.வி. சண்முகமும் அவரது சகோதரர் ராதாகிருஷ்ணனும் பல லட்ச ரூபாய் கொடுத்துக் கூலிப்படையை ஏவி இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஏற்கனவே திண்டிவனத்தில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது நாட்டார்மங்கலத்திலும் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த வன்முறைச் சம்பவங்கள் அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட அளவில் கட்சி இவ்வாறு இரண்டாகப் பிரிந்து மோதுவது வேதனையளிப்பதாகத் தெரிவிக்கும் கட்சித் தொண்டர்கள், இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாகத் தலையிட்டு உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பொழுதுதான் கட்சியில் மீண்டும் அமைதி திரும்பும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
