CRIME
துக்க வீட்டிலேயே அடுத்த துக்கம்.. ஃப்ரீசர் பாக்ஸில் கை வைத்த 65 வயது மூதாட்டி.. அடுத்த நொடியே நடந்த விபரீதம்.. நடந்தது என்ன..? திருத்தணியில் பரபரப்பு..!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நேரு நகரில், இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் 65 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேரு நகரைச் சேர்ந்த 55 வயதான சண்முகம் என்பவர் நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் திருத்தணி நகராட்சிக்குச் சொந்தமான இலவச குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை உறவினர்களும், ஊர் மக்களும் சண்முகத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்தக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் கசிந்து அருகிலிருந்த பெண்கள் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் காசிநாதபுரத்தைச் சேர்ந்த தேவகி (65) என்பவர் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், தேவகியம்மா (65), செல்வி (60), சாமுண்டீஸ்வரி (60), பஞ்சாமிர்தம் (55), தனலட்சுமி (45) உட்பட 10 பெண்கள் பலத்த காயமடைந்து, உடனடியாக மீட்கப்பட்டுத் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலவச குளிர்சாதனப் பெட்டியைச் சரியான முறையில் பராமரிக்கத் தவறிய நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைக் கண்டித்து நேரு நகரைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் திருத்தணி – சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து முடங்கிப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் ஷூபம் திமான் தலைமையிலான காவல்துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். காவல்துறையினரின் சமாதானத்தை ஏற்றுப் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்ற நிலையில், இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
