CRIME
“நள்ளிரவு பயங்கரம்..” தனிமையில் இருந்த பெண் வீட்டு மாடியில் அரைகுறை ஆடையுடன் பதுங்கிய மர்ம நபர்… சிறுவன் அலறியதால் நடந்த திகில் சம்பவம்..!!
விழுப்புரம் லட்சுமி நகரில், தனியாகப் பெண் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் அரைகுறை ஆடையுடன் பதுங்கியிருந்த மர்ம நபரைப் பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஓட்டுநர் முருகன் என்பவர் இரவுப் பணிக்குச் சென்றிருந்ததால், அவரது மனைவி கோமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சரோஜா என்பவரின் 12 வயது மகன் தண்ணீர் தொட்டியைப் பார்ப்பதற்காகத் தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றபோது, அருகிலுள்ள கோமதியின் வீட்டு மாடியில் டவுசர் மட்டும் அணிந்து துண்டு போர்த்தியபடி மர்ம நபர் ஒருவர் பதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டான். தன்னைப் பார்த்துவிட்ட ஆத்திரத்தில் அந்த நபர் சிறுவன் மீதும், சத்தம்கேட்டு மாடிக்கு வந்த அவனது தாய் சரோஜா மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சிறுவன் மற்றும் தாயின் அலறல் சத்தம்கேட்டுத் திரண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக விழுப்புரம் நகரக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துவிட்டு அந்த மர்ம நபரைச் சுற்றிவளைத்துப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே, லட்சுமி நகருக்கு அருகிலுள்ள ஆசிரியர் நகரில் சில நாட்களுக்கு முன்பு டவுசர் அணிந்து வந்த 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதேபோன்ற தோற்றத்தில் மற்றொரு நபர் பிடிபட்டிருப்பதால், இவருக்கும் முந்தைய கொள்ளைச் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா அல்லது வேறு கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
