LATEST NEWS
“நாளை வானில் நிகழவிருக்கும் அதிசயம்” பூமிக்கு மிக அருகில் வரும் நிலவு… இரவு 8.23 மணிக்கு வானில் தெரியும் ‘பீவர் சூப்பர் மூன்’… தவறவிடாதீர்கள்…!!
நாளை (செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24) இரவு வானில் ‘பீவர் சூப்பர் மூன்’ எனப்படும் அரிய மற்றும் பிரமாண்டமான முழு நிலவு நிகழ்வு தோன்றவுள்ளது. இந்திய நேரப்படி அன்று இரவு 8.23 மணிக்கு நிலவு தனது முழுமையான ஒளியை அடையும் என்று வானிலை மற்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியன் மறைந்த பிறகு கிழக்கு வானில் நிலவு உதிக்கும்போதே அதன் பிரமாண்டத் தோற்றத்தை மிகத் தெளிவாகப் பார்த்து ரசிக்க முடியும்.
பொதுவாக நிலவு தனது நீள்வட்டச் சுற்றுப்பாதையில் சுற்றி வரும்போது, பூமிக்கு மிக அருகில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரத்து 765 கி.மீ தொலைவில் வரும் தருணமே ‘சூப்பர் மூன்’ என அழைக்கப்படுகிறது. இதனால் வழக்கமான முழு நிலவை விட இது 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். கடும் குளிர்காலம் தொடங்கும் முன்பாக நீர்நாய்கள் தங்களின் இருப்பிடங்களைத் தயார்படுத்தும் காலம் என்பதால், நவம்பர் மாதத்தில் வரும் இந்த முழு நிலவு பாரம்பரியமாக ‘பீவர் சூப்பர் மூன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த கண்கவர் வானியல் அதிசயத்தைக் காண தொலைநோக்கி உள்ளிட்ட எந்தவொரு சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை; வானம் மேகமூட்டமின்றி தெளிவாக இருந்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வெறும் கண்களாலேயே இதனை எளிதாகப் பார்த்து மகிழலாம். அடுத்தடுத்து வரவிருக்கும் தொடர் சூப்பர் மூன் வரிசையில் இது முதல் நிகழ்வாகும்; இதனைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 23-ம் தேதியும், அடுத்த ஆண்டு ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 20 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்த சூப்பர் மூன் நிகழ்வுகள் வானில் தோன்ற உள்ளன.
