CRIME
“போலீசுக்குத் தெரியாமல் உடலைக் கொடுங்க..!” விடுதி அறைக்குச் சென்ற 1 மணி நேரத்தில் நடந்தது என்ன..? 22 வயது மாணவியைக் கைகளில் தூக்கிக்கொண்டு ஓடும் ஆண் நண்பர்கள்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த பயங்கரம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இரண்டு தோழிகள் மற்றும் நான்கு ஆண் நண்பர்களுடன் மைஹார் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில், அங்கு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இவர்கள் ஏழு பேரும் அங்குள்ள ‘ஆஸ்தா யாத்ரி நிவாஸ்’ என்ற தங்கும் விடுதியில் மூன்று அறைகளை எடுத்துத் தங்கியுள்ளனர். ஆனால், அறைக்குச் சென்ற சரியாக ஒரு மணி நேரத்திற்குள், அதாவது அதிகாலை 4 மணியளவில் அந்த மாணவியின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது. இதையடுத்து, ஆண் நண்பர்கள் அவரைத் தங்களது கைகளில் தூக்கிக்கொண்டு விடுதியிலிருந்து வெளியே செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
உடனடியாக அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் இருந்த அவரது நண்பர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல், உடனடியாக மாணவியின் உடலை ஜபல்பூருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், விடுதியில் தங்கிய ஏழு பேரில் நான்கு பேரிடம் மட்டுமே விடுதி நிர்வாகம் அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையிலான அந்த ஒரு மணி நேர இடைவெளியில் அறைக்குள் என்ன நடந்தது? காவல்துறை நடைமுறைகளைத் தவிர்த்துவிட்டு மாணவியின் உடலை உடனடியாக எடுத்துச் செல்ல நண்பர்கள் முயற்சித்ததன் பின்னணி என்ன? மற்றும் ஏழு பேரிடமும் அடையாள அட்டைகளைப் பெறாமல் விடுதி நிர்வாகம் அலட்சியமாக இருந்தது ஏன்? எனப் பல முக்கியக் கேள்விகள் இந்த வழக்கில் எழுந்துள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனக் கூறியுள்ள உள்ளூர் காவல்துறையினர், இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
