LATEST NEWS
“கலெக்டருக்கே இந்த நிலைமையா..? சாமானியப் பெண்களின் கதி என்ன..?” த.வெ.க எம்.எல்.ஏ வழக்கில் நீதிபதி வேதனை..!!
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், பணியிடப் பாதுகாப்பு குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளார். அரசுப் பணியில் மிக வலிமையான மற்றும் உயரிய அதிகாரம் கொண்ட பதவிகளில் ஒன்று மாவட்ட கலெக்டர் பதவியாகும். அத்தகைய உயரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கே பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது, நம் குடியரசுக்கு ஒரு துயரமான நிகழ்வு என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
மாவட்ட கலெக்டர் நிலையிலேயே இத்தகைய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றால், அரசு மற்றும் தனியார் துறைகளில் குறைந்த அதிகாரப் பொறுப்பில் பணிபுரியும் சாமானியப் பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் புகார் அளிக்க நேரிட்டால் அவர்களின் நிலைமை என்னவாகும் என்று நினைத்தாலே அச்சமாக இருக்கிறது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் என்பது காலம், இடம், பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து அல்லது ஒரு பெண் வகிக்கும் உயரிய பதவி என எதையும் கருத்தில் கொள்வதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் உடனடியாகப் புகார் அளிக்காமல் இருந்ததற்கான காரணத்தையும் நீதிபதி தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார். பொதுவெளியில் தேவையற்ற விளம்பரத்தையும், சர்ச்சைகளையும் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அந்த மாவட்ட கலெக்டர் ஆரம்பத்தில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார் என்று நீதிபதி வி.லட்சுமி நாராயணன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
