LATEST NEWS
“கடைகளில் பாக்கெட் உணவு வாங்குபவர்களே உஷார்..” இனி பாக்கெட் முன் பக்கத்தில் இதை கட்டாயம் பாருங்க.. உச்சநீதிமன்றம் பிறப்பித்த வரலாற்று உத்தரவு..!!
பாக்கெட் உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், பாக்கெட்டின் முன்பக்கத்தில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகச் சிவப்பு நிற அறுகோண வடிவ எச்சரிக்கைச் சின்னங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட மற்றும் பாக்கெட் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைத் தடுக்கும் நோக்கில், உணவுப் பாக்கெட்டுகளின் முன்பக்கத்திலேயே எச்சரிக்கை லேபிள்களை அச்சிடுவது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, அனைத்து ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் சேர்த்து ஒரே பொதுவான சின்னமாக அச்சிடுவதற்குப் பதிலாக, சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான சிவப்பு நிற அறுகோண வடிவ எச்சரிக்கைச் சின்னங்களைப் பயன்படுத்த வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உணவுப் பாக்கெட்டுகளின் பின்பக்கத்தில் மிகச் சிறிய எழுத்துகளில் அச்சிடப்படும் ஊட்டச்சத்து விவரங்களைச் சாமானிய மக்களால் எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இந்நிலையில், பாக்கெட்டின் முன்பக்கத்திலேயே பளிச்சென்று தெரியும் வகையில் தனித்தனிச் சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கைச் சின்னங்கள் இடம்பெறுவதன் மூலம், நுகர்வோர் தாங்கள் வாங்கும் உணவில் எது அதிகமாக உள்ளது என்பதை உடனடியாக அடையாளம் கண்டு ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்ய முடியும் என்பதால், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்கள் மற்றும் சுகாதார ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
