CRIME
“பென்ஷன் கார்டு” என வந்த ஒரு வாட்ஸ்அப் கோப்பு… சில நிமிடங்களில் பறிபோன ரூ.5.56 லட்சம்… ஓய்வூதியதாரர்களுக்கு பகீர் எச்சரிக்கை…!!
மூத்த குடிமக்களுக்கான சிறப்புப் பென்ஷன் அட்டை தருவதாகக் கூறி சைபர் குற்றவாளிகள் நடத்தும் புதிய மோசடியில், மும்பையைச் சேர்ந்த 89 வயது ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் ரூ.5.56 லட்சத்தை இழந்துள்ளார். வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட ‘CANARA PENSION CARD UPDATE APK’ என்ற கோப்பை அவர் திறக்க முயன்ற அடுத்த சில நிமிடங்களிலேயே, அவரது வங்கிக் கணக்குகளிலிருந்து ஐந்து அங்கீகரிக்கப்படாத UPI பரிவர்த்தனைகள் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது; இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற போலி APK கோப்புகள் மற்றும் திரைப் பகிர்வு மூலம் நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களிடம் பெருமளவு பணம் திருடப்படுவதாகக் காவல்துறையும் வங்கிகளும் எச்சரித்துள்ளன. ஓய்வூதிய ஆயுள் சான்றிதழ் போன்ற சேவைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தெரியாத கோப்புகள் அல்லது செயலிகளைத் திறக்கவோ அனுமதிகள் வழங்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணம் மோசடியாக எடுக்கப்பட்டால் தாமதிக்காமல் 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணிலோ அல்லது cybercrime.gov.in இணையதளத்திலோ உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் அழைப்பைத் துண்டித்துவிட்டு, சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்துவதே பாதுகாப்பான வழி என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
