CRIME
“காதல் வலையில் வீழ்த்தி போட்டி கும்பலுக்கு ஸ்கெட்ச்”.. ரோத்தக் துப்பாக்கிச் சூட்டில் தப்பிய ரவுடி… பாங்காக் பறந்த மர்மப் பெண்.. பின்னணி என்ன?
ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள மிலன் தாபாவில் நடந்த நான்கு பேர் கொலை வழக்கில், ரவுடி சன்னி ரிட்டோலியாவின் காதலியான ஜான்வி என்பவர் போட்டி கும்பலான பாவ் ரிட்டோலியா கும்பலுக்கு உளவாளியாகச் செயல்பட்டதாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு சன்னியின் வாழ்க்கையில் திட்டமிட்டு நுழைந்த ஜான்வி, அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, தாபா இருந்த இடத்தைத் துல்லியமாகப் போட்டி கும்பலுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், சன்னி பின்வாசல் வழியாகத் தப்பித்துவிட்டார்.
தகவல் தெரிவித்ததற்குப் பிரதிபலனாக வெளிநாட்டிற்குத் தப்பிக்கப் போட்டி கும்பலுடன் ஜான்வி ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவு 12.30 மணியளவில் கொலை நடந்த நிலையில், மறுநாள் காலையே அவர் பாங்காக்கிற்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதற்கு முன்பே அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இத்தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேரில் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
ஜான்வி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ‘லேடி டான்’ பாப்லி தேவியின் மகள் ஆவார். கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய பாப்லி தேவி, கிராமத் தலைவராகவும் பதவி வகித்தவர்; மேலும் ஜான்வியின் தந்தை விவேக் என்ற விக்கி மாலிக் கடந்த மார்ச் மாதம் பாக்பத்தில் நடந்த திருமண விழாவின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். பானிப்பட்டில் வசித்து வந்த ஜான்வி கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில், அவரது குடும்பப் பின்னணி மற்றும் கடந்தகால வன்முறைச் சம்பவங்களுக்கும் இந்தச் சதிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
