CRIME
அய்யோ கடவுளே.. 73 வயது மூத்த மருத்துவரைக் கற்களாலும் கண்ணாடித் துண்டுகளாலும் அடித்துக் கொன்ற கும்பல்.. 7 ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாத அந்த ஒரு சட்டம்.. அதிர்ச்சி பின்னணி..!!
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள தியோக் தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் பணியாற்றி வந்த 73 வயதான மூத்த மருத்துவர் தேபென் தத்தா ஆத்திரமடைந்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆகியும், மருத்துவர்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்படவிருந்த தனிச் சட்டம் இன்றுவரை நடைமுறைக்கு வராமல் கிடப்பில் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி, சோமரா மாஜி என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஆபத்தான நிலையில் அந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு உயிரிழந்தார். அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மருத்துவர் பணியில் இல்லை எனக் குற்றம் சாட்டி மருத்துவமனை முன்பு திரண்ட கும்பல், ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டது.
மருத்துவமனை வெளியே திரண்டிருந்த கூட்டத்தை அமைதிப்படுத்துவதற்காக வெளியே வந்த 73 வயது முதியவரான மருத்துவர் தேபென் தத்தாவை, அந்தக் கும்பல் கற்களாலும் உடைந்த கண்ணாடித் துண்டுகளாலும் கொடூரமாகத் தாக்கியது. அதுமட்டுமின்றி, படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை மீட்க வந்த ஆம்புலன்ஸையும் உள்ளே விடாமல் அந்தக் கும்பல் தடுத்து நிறுத்தியது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு சி.ஆர்.பி.எஃப் படையினர் அங்கு வந்து அவரை மீட்டு ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து அசாம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பாதுகாப்பற்ற சூழலைக் காரணம் காட்டி ஏழு தேயிலைத் தோட்ட மருத்துவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்தக் கொலை வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டில் 25 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து, ஒருவருக்கு மரண தண்டனையும் 24 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. டாக்டர் தேபென் தத்தாவின் மரணத்தைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தாக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான தனிச் சட்ட வரைவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உருவாக்கியது. ஆனால், ஒரு குறிப்பிட்ட தொழிலுக்காக மட்டும் மத்தியச் சட்டம் இயற்ற முடியாது எனக் கூறி மத்திய உள்துறை அமைச்சகம் அதனை நிராகரித்த நிலையில், 2023-ஆம் ஆண்டில் மக்களவையிலும் தனிச் சட்டம் கொண்டு வரும் திட்டம் இல்லை என அரசு தெரிவித்ததால், உயிரைக் கொடுத்துப் போராடிய மருத்துவர் தத்தாவின் மரணத்திற்குப் பிறகும் மருத்துவர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் எட்டாக்கனியாகவே தொடர்கிறது.
