LATEST NEWS
தொட்டாலே பிளாஸ்ட்..! மனிதத் தோலில் பட்டால் அவ்வளவு தான்.. ஒரு செகண்டுக்கு 500 முறை வெடிக்கும்… விஞ்ஞானிகளையே மிரள வைத்த பூச்சி..!!
இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் ஒன்றான ‘பாம்பார்டியர் வண்டு’ (Bombardier Beetle), தன்னைத் தாக்க வரும் எதிரிகளை 100 டிகிரி செல்சியஸ் கொதிக்கும் வேதிப்பொருளைக் கொண்டு பொசுக்கும் அசாத்தியத் திறன் கொண்டது. அரை இன்ச் முதல் 1 இன்ச் வரை மட்டுமே வளரக்கூடிய இந்தச் சிறிய வண்டுகள், அண்டார்டிகாவைத் தவிர உலகின் அனைத்துக் கண்டங்களிலும் உள்ள ஈரப்பதமான காடுகள் மற்றும் புல்வெளிகளில் வாழ்கின்றன. இதன் உடலின் பின்புறத்தில் அமைந்துள்ள தனித்துவமான பாதுகாப்பு ஆயுதமே இதைப் பிற பூச்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
இந்த வண்டின் வயிற்றுப் பகுதியில் ஒரு மினியேச்சர் வேதியியல் தொழிற்சாலையே இயங்குகிறது; அதில் ‘ரிசர்வாயர்’ மற்றும் ‘ரியாக்சன்’ என இரண்டு தனித்தனி அறைகள் உள்ளன. எறும்பு, சிலந்தி, தவளை போன்ற எதிரிகள் இதைத் தாக்க வரும்போது, ரிசர்வாயர் அறையிலுள்ள ஹைட்ரோகுவினோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகிய வேதிப்பொருட்களை அது ரியாக்சன் அறைக்கு அனுப்புகிறது. அங்குள்ள நொதிகளுடன் கலந்து ஏற்படும் பயங்கர வேதிவினையால், வெப்பம் உடனே 100 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, ‘பொப்’ என்ற சத்தத்துடன் ‘பென்சோகுயினோன்’ என்ற நச்சுப் புகை கலந்த திரவமாக வெடித்து சிதறுகிறது.
ஒரு மெஷின் கன் போல ஒரு வினாடிக்கு 500 முறை தொடர்ந்து வெடிக்கும் ஆற்றல் கொண்ட இந்த வண்டு, தனது உடலின் பின்புறத்தை 270 டிகிரி கோணத்தில் சுழற்றி எந்தத் திசையிலிருந்தும் எதிரிகளைக் குறிபார்த்துத் தாக்கும். தவளை போன்ற உயிரினங்கள் இதை விழுங்கினால் கூட, அதன் வயிற்றுக்குள்ளேயே வெடித்து வாந்தி எடுக்க வைத்து தப்பித்துவிடும் இந்தத் திரவம், மனிதத் தோலில் பட்டால் தீக்காயம் போன்ற கொப்புளங்களை ஏற்படுத்திவிடும். இந்த வண்டு தன் உடலைச் சேதப்படுத்திக் கொள்ளாமல் இந்த வெடிப்பை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்று எம்.ஐ.டி விஞ்ஞானிகளே வியந்து ஆராய்ந்து வருகின்றனர்.
