CRIME
“டைகர் ஷெராஃப் காரை குறிவைத்த தோட்டாக்கள்..!” மொட்டை தலை மாறுவேடம்.. தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்.. அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்!”
மும்பை ஜூஹூ பகுதியில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிரவைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை கால்பந்து மைதானத்திலிருந்து கார் மூலம் வெளியேறியபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் டைகர் ஷெராஃப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது ஓட்டுநர் மற்றும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் கூட்டாளியான அனில் பண்டிட் என்பவன் சமூக ஊடகப் பதிவின் மூலம் பொறுப்பேற்றுள்ளான். சல்மான் கானுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வரும் பாலிவுட் பிரபலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையே இந்தத் தாக்குதலின் முக்கியப் பின்னணி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் செயல்பட்ட பீகாரைச் சேர்ந்த ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ரேஹான், பூல் சிங் ஆகிய மூவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் ராஜஸ்தானின் கோட்டா ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாகவே இதற்கான திட்டமிடல் நடந்து வந்ததும், மக்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக நீண்ட முடி வைத்திருந்த ஹிருத்திக் தனது தலையை முழுமையாக மொட்டையடித்துக் கொண்டு மாறுவேடமிட்டதும் அம்பலமாகியுள்ளது. மேலும், இக்குற்றத்திற்காக செப்டம்பர் 11 அன்று ரூ.25,000 கொடுத்து ஒரு பழைய மஞ்சள் நிற பல்சர் பைக்கை வாங்கிய அவர்கள், நவராத்திரி பண்டிகையைக் காரணம் காட்டி அதன் ஆர்.சி புத்தக ஆவணங்களை மாற்றாமல் ரகசியமாக மறைத்து வைத்துள்ளனர்.
தாக்குதலை அரங்கேற்றிய பின்னர், அந்தேரி மேற்கு பகுதியில் பைக்கைக் கைவிட்டுவிட்டு, உள்ளூர் ரயில் மூலம் போரிவலிக்குத் தப்பியுள்ளனர். அங்கிருந்து சூரத் செல்வதற்காக ஒரு வாடகைக் காரை மொபைல் செயலி மூலம் ஹிருத்திக் முன்பதிவு செய்துள்ளார். கார் வர தாமதமானதால், தனது கைபேசியை ஆன் செய்து ஓட்டுநரை அவர் அழைத்தபோது, மொபைல் சிக்னல் மூலமாக அவர்களது இருப்பிடத்தை மும்பை போலீசார் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர். கோட்டாவில் புனே-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸில் பிடிபட்ட இவர்கள், பேருந்து மூலம் டெல்லி சென்று அங்கிருந்து நேபாளத்திற்குத் தப்பியோடத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் வெளிவந்துள்ளது.
