LATEST NEWS
“அரசு ஊழியர்களுக்கு ஸ்வீட் நியூஸ்..” தீபாவளி போனஸ் தொகை எவ்வளவு தெரியுமா..? முதல்வர் விஜய் அறிவிப்பு..!!
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்களிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025–26ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஊதியச் சட்டத் தொகுப்பு, 2019 இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000/- எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பைத் தளர்த்தி, லாபம் ஈட்டியுள்ள மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்கள், மின் பகிர்மானக் கழகம், போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு இணையம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் நிலைக்கு ஏற்ப 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்களுக்கு 367 கோடியே 20 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும். அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும்.
