LATEST NEWS
“இனி எலக்ட்ரிக் கார் மட்டும்தான்..” அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!
கார்பன் உமிழ்வு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியாக, அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு இனி மின்சார கார்களையே வாங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நமது நாட்டின் மொத்த கார்பன் உமிழ்வில் போக்குவரத்து துறையின் பங்கு 12 சதவீதமாக உள்ள நிலையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைக்கவும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய செலவினத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகள், தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் கார்கள் பழுதடைந்து மாற்றப்படும்போதோ அல்லது ஓய்வுபெறும்போதோ அவற்றுக்கு பதிலாக மின்சார கார்களையே வாங்க வேண்டும். ஒருவேளை மின்சார வாகனங்களுக்கு பதிலாக பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்க விரும்பும் துறைகள், அதற்கான காரணங்களை விளக்கி விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
மேலும், மின்சார வாகனங்களின் கொள்முதலுக்கான உச்சவரம்பு ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பெட்ரோல், டீசல் மற்றும் இரண்டு வகையான எரிபொருட்களைப் பயன்படுத்தும் கலப்பின கார்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக மட்டுமே உள்ளது. வாகனங்களின் விலை மற்றும் அவற்றுக்கான பராமரிப்புச் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் இந்த முக்கிய முடிவு, நாட்டின் வாகனத் துறையில் பசுமை மாற்றத்தை விரைவுபடுத்தும் என நம்பப்படுகிறது.
