CRIME
கலிகாலம்..! கள்ளக்காதலை பார்த்ததால் 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு விஷம் கொடுத்து கொடூர கொ**… 19 வயது பெண்ணும், சிறுவனும் செய்த கொடூரம்..!!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள கல்லூரு பகுதியில், தகாத உறவை மறைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த 19 வயது பெண்ணுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. தசரா விடுமுறைக்காக ஊருக்கு வந்த 10-ஆம் வகுப்பு மாணவன் ரவி (15), இவர்களின் முறையற்ற தொடர்பை எதிர்பாராதவிதமாக நேரில் பார்த்து கண்டித்துள்ளான். மேலும், இந்த விவகாரத்தை இருவரின் குடும்பத்தினரிடமும் கூறிவிடுவேன் என்று அவன் எச்சரித்ததால், தங்களது உறவு வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில் அந்த ஜோடி ரவியை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளது.
திட்டமிட்டபடி, அக்டோபர் 21 அன்று அந்தச் சிறுவன் ரவியை ஒரு தனிமையான இடத்திற்கு வரவழைத்து, குளிர்பானத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து கொடுத்துள்ளான். அதைக் குடித்த சிறிது நேரத்தில் தொண்டை எரிச்சல், வாயில் கொப்புளங்கள் ஏற்பட்டு மயக்கமடைந்த ரவியிடம், அவர்கள் தாங்கள் செய்த சதியை ஒப்புக் கொண்டுள்ளனர். அங்கிருந்து தப்பியிறங்கி வந்து தனது குடும்பத்தினரிடம் அழுதபடி நடந்துகூறிய சிறுவன், உடனடியாக கம்மம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வாரங்கல் மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டான். ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 8 அன்று பரிதாபமாக உயிரிழந்தான்.
உயிரிழந்த சிறுவனின் வாக்குமூலம் மற்றும் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கல்லூரு காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய பெண் மற்றும் சிறுவனை அதிரடியாகக் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட பெண் சத்துப்பள்ளி துணைச் சிறையிலும், மற்றொரு சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 103(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இச்சம்பவம், இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் ஒழுக்கக்கேடு மற்றும் குற்ற மனப்பான்மையை வெளிக்காட்டும் வகையில் சமூகத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
