CRIME
“சிக்கன் ரைஸ் உடனே வேணும்..” சாப்பாடு வர லேட் ஆனதால் ஆத்திரம்..!போலீஸே கையெடுத்துக் கும்பிட்டும் கேட்காமல் ஓட்டலை அடித்து நொறுக்கிய கும்பல்..! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!
விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டியைச் சேர்ந்த வாலிபர்கள் 12 பேர் கடந்த 3-ந் தேதி வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவில் திருச்செந்தூரில் இருந்து தங்களது ஊருக்கு வேனில் புறப்பட்டு சென்றனர். எட்டயபுரம் அருகே சென்றபோது, அங்குள்ள சாலையோர ஓட்டலில் சாப்பிடுவதற்காக வேனை நிறுத்திவிட்டு கும்பலாக சென்றனர். அந்த ஓட்டலில் குறைவான இருக்கைகளே இருந்தன. அப்போது ‘சிக்கன் ரைஸ்’, புரோட்டா போன்றவற்றை ஆர்டர் செய்தனர். ஓட்டலில் சாப்பிட காத்திருந்தவர்கள்,”விரைவாக உணவுகளை சப்ளை செய்யுங்கள், சிக்கன் ரைசை உடனே கொடுங்கள்” என்று கேட்டனர்.
அதற்கு ஓட்டல் ஊழியர்கள், “இங்கு குறைவான உணவு வகைகளே உள்ளன. அனைவருக்கும் சிக்கன் ரைஸ் தயார் செய்து வழங்க சிறிதுநேரமாகும். இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் பெரிய ஓட்டல் உள்ளது. அவசரமென்றால் அங்கு செல்லுங்கள்” என்று கூறினர். ஓட்டலில் சாப்பிட அமர்ந்தவர்கள், காத்திருந்தவர்கள் என அனைவரும் மொத்தமாக வெளியேறினர். உணவு வகைகளை ஆர்டர் செய்து விட்டு அனைவரும் செல்வது சரியா? என அவர்களை ஓட்டல் ஊழியர்கள் கண்டித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பட்டேல் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். மேலும் அவர் இதுகுறித்து எட்டயபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் முன்னிலையிலேயே ஓட்டலில் இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர். கும்பலாக வந்தவர்கள் ஓட்டலில் இருந்த நாற்காலிகள், மேஜைகள், பாத்திரங்களை தூக்கி வீசி சூறையாடினர். மோதலில் ஓட்டல் தொழிலாளியான தங்கதுரை (வயது 22) படுகாயமடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கம்மாபட்டியைச் சேர்ந்த அர்ஜூன் (30) உள்பட 10 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
