CRIME
அழகான DP-க்கு பின்னால் ஒளிந்திருந்த கொடூர அரக்கன்.. கேமராவை ஆஃப் செய்துவிட்டு அரங்கேற்றிய நாடகம்..! அந்தரங்க வீடியோக்களை வைத்து லட்சக்கணக்கில் சுருட்டிய சைபர் கில்லாடி கைது.!!
ஹைதராபாத்தில் சமூக வலைதளங்கள் மூலம் ஹனிட்ராப் மற்றும் பிளாக்மெயில் செய்து மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் பவன் குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பெண்களின் பெயரில் போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, இளைஞர்களுடன் நட்பு ஏற்படுத்தி அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. போலீசாரின் கணக்கின்படி, இந்த சைபர் மோசடியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்களிடம் பேசி, ஏறத்தாழ 38 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையில், இந்த மோசடி நபரின் வலையில் சிக்கியவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் அடங்குவர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் மருத்துவர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், டெலிவரி ஊழியர்கள் மற்றும் கிக் தொழிலாளர்கள் போன்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவரைத் நம்பி தங்களது அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்ட 82 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தி பணம் பறிக்க இப்புகைப்படங்களை பவன் குமார் பயன்படுத்தி வந்ததாகவும், மக்களை ஏமாற்ற கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படங்களை அவன் பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் மூலம் இளைஞர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி, பின்னர் வாட்ஸ்அப்பிற்கு மாற்றி பழகி வந்துள்ளான். தனது அடையாளத்தை மறைக்க தொலைபேசி அழைப்புகளில் பேசுவதைத் தவிர்த்ததுடன், வீடியோ காலின் போதும் கேமராவை அணைத்தே வைத்திருந்துள்ளான். ஆனால், எதிர்முனையில் உள்ளவர்களை மட்டும் வீடியோவை ஆன் செய்யுமாறு கட்டாயப்படுத்தி, அவர்கள் அறியாமல் தனது மற்றொரு போனில் அவற்றைப் பதிவு செய்து பிளாக்மெயில் செய்து வந்துள்ளான்.
