நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் தம்பதி…35 பவுன் நகைக்காக இப்படியா…கோர்ட்டுக்கு அனுப்பாம அங்க எதுக்கு வச்சாங்க…சென்னை மாம்பலத்தில் நடந்த அதிர்ச்சி கொலை… சிக்கலில் மாட்டிய போலீசார்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் தம்பதி…35 பவுன் நகைக்காக இப்படியா…கோர்ட்டுக்கு அனுப்பாம அங்க எதுக்கு வச்சாங்க…சென்னை மாம்பலத்தில் நடந்த அதிர்ச்சி கொலை… சிக்கலில் மாட்டிய போலீசார்…!

Published

on

சென்னை சேலையூரில் நடந்த 35 பவுன் நகை திருட்டு வழக்கில், கைது செய்யப்பட்ட தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்காமல், போலீசார் தனியார் அறையில் அடைத்து வைத்த முடிவு தற்போது பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (60) மற்றும் அவரது மனைவி விஜயா (55) ஆகிய இருவரையும் கடந்த வாரம் மேல்மருவத்தூரில் வைத்து சேலையூர் போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட நகைகளை மறைத்து வைத்திருக்கும் இடத்தை மீட்கும் நோக்கில், சட்டப்படியான நீதிமன்றக் காவலுக்கு அனுப்பாமல், அவர்களை வேலைக்குச் சேர்த்துவிட்ட அனந்தபத்மநாபன் என்பவரின் மேற்கு மாம்பலம் வீட்டில் உள்ள ஒரு அறையில் போலீசார் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர்.

அறையில் அடைக்கப்பட்டிருந்த தம்பதியினருக்கு இடையே நேற்று முன்தினம் இரவில் திடீரென கடுமையான வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. சண்டையின் உச்சக்கட்டத்தில், அங்கிருந்த கத்தியை எடுத்து விஜயா தனது கணவர் பன்னீர்செல்வத்தைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், மனைவியிடமிருந்து கத்தியைப் பிடுங்கி அவரைப் பதிலுக்குக் குத்தியுள்ளார். இதில் இருவருமே ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து அந்த அறையிலேயே மயங்கி விழுந்துள்ளனர். மறுநாள் காலையில் அனந்தபத்மநாபன் அறையைத் திறந்து பார்த்தபோது, தம்பதியினர் இருவரும் ரத்தக் கறைகளுடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

Advertisement

சம்பவ இடத்திற்குச் சேலையூர் மற்றும் அசோக் நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் படுகாயமடைந்த விஜயா பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை மீட்ட போலீசார், அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் அசோக் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால், மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பன்னீர்செல்வம் மீது அசோக் நகர் போலீசார் தற்போது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் உடல்நலம் தேறியவுடன் முறைப்படி கைது செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த விவகாரம் நகை திருட்டு வழக்கை விசாரித்த சேலையூர் போலீசாருக்குப் பேரதிர்ச்சியையும், சட்ட ரீதியான கடுமையான சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்தவுடன் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்க வேண்டும்; அதன் பின்னரே நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து நகையை மீட்டிருக்க வேண்டும். இந்த சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், கைதிகளைத் தனியார் அறையில் அடைத்து வைத்த அலட்சியத்தால் ஒரு கொலையே நடந்துள்ளது. இந்த அத்துமீறல் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதால், சம்பந்தப்பட்ட சேலையூர் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in