“உனக்கு சொத்து கிடையாது…” பெற்ற தாயை டம்பல்ஸால் அடித்துக் கொடூரக் கொலை…மணப்பாறையில் போதை மகனின் வெறிச்செயல்..!! – cinefeeds
Connect with us

CRIME

“உனக்கு சொத்து கிடையாது…” பெற்ற தாயை டம்பல்ஸால் அடித்துக் கொடூரக் கொலை…மணப்பாறையில் போதை மகனின் வெறிச்செயல்..!!

Published

on

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் டம்பல்ஸ் கொண்டு தலையில் தாக்கி கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மணப்பாறை அருகே கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த கணேசனின் மனைவி செல்வி (50). இவருக்கு செல்வம், வெங்கடேசன், கவினேஷ் என 3 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகனான வெங்கடேசனுக்கு சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, மனைவி லாவண்யா மற்றும் ஒரு மகளும் உள்ளனர். நாளடைவில் மது போதைக்கு அடிமையான வெங்கடேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து வெங்கடேசன் தனது தாயுடன் கல்லாத்துப்பட்டியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது தந்தை கணேசனும், தாய் செல்வியும் சொத்தை தனது அண்ணன் மற்றும் தம்பிக்கு மட்டும் பிரித்துக் கொடுத்துவிட்டதாகக் கூறி, வெங்கடேசன் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில், தனக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் எனக் கூறி தாய் செல்வியிடம் வெங்கடேசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, செல்வி “நீ வேலைக்கு போகாம எப்போதும் குடிச்சிட்டு போதையில் இருக்குற.. உனக்கு சொத்தைப் பிரிச்சுக் கொடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டில் உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தப்படும் டம்பல்ஸை எடுத்து தாய் செல்வியின் தலையில் மூளை சிதறும் அளவிற்குப் பலமாகத் தாக்கியுள்ளார். காயம் அடைந்தவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பெற்ற தாயை மகனே டம்பல்ஸால் தாக்கி கொலை செய்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in