LATEST NEWS
“வயசான காலத்துல நாங்க எங்க போவோம்..?” மாதச் சம்பளம் ரூ.8 லட்சம்… ஆனா பெத்தவங்களை தெருவுல நிக்க வச்ச மகன்… சொந்த வீட்டிற்கு முன்பே பெற்றோர் நடத்திய கதறல் போராட்டம்..!!
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் கொத்தீராம்பூர் பகுதியில், முதிய தம்பதி ஒருவர் சொத்து தகராறு காரணமாகத் தங்களுடைய சொந்த வீட்டிற்கு முன்பாகவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்ற மகனே தங்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜம்மிகுண்டா மண்டலம் வாவிலாலா கிராமத்தைச் சேர்ந்த தேவுலபல்லி லட்சுமணன் என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பணிநிறைவு பெற்றவர். இவருக்கு ரவிகுமார் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். லட்சுமணன் கடந்த 2002 ஆம் ஆண்டு கொத்தீராம்பூரில் இந்த வீட்டைக் கட்டிய நிலையில், 2010 ஆம் ஆண்டு அந்த வீட்டைத் தன் மகன் பெயருக்கு மாற்றி எழுதியுள்ளார்.
லட்சுமணனின் மகன் ரவிகுமார் ஹைதராபாத்தில் ஏரோஸ்பேஸ் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் என்றும், மாதத்திற்கு சுமார் 8 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என்றும் அத்தம்பதியினர் தெரிவித்தனர். இவ்வளவு பெரிய பதவியிலும் வருமானத்திலும் இருந்தபோதிலும், கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து வீட்டை விட்டு வெளியேறுமாறு தன் மகன் தங்களை வற்புறுத்தி வருவதாக லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்தார். தற்போது அந்த வீட்டிலிருந்து வரும் வாடகை வருமானமே தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரே ஆதாரமாக உள்ளது என்றும், இந்தத் தளர்ந்த வயதில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டால் எங்கே செல்வது என்று தெரியவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், லட்சுமணனின் மனைவி ஜெயலட்சுமி இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தச் சூழல் அவர்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மகன் பெயருக்குச் செய்யப்பட்ட சொத்துப் பரிமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தங்களின் முதிய வயதில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அத்தம்பதியினர் நிர்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தங்களின் மகனுடன் உள்ள இந்தச் சொத்துப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து தங்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்கள் சொந்த வீட்டிற்கு முன்பாகவே முதிய தம்பதி நடத்தும் இந்தப் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
