LATEST NEWS
தமிழ்நாட்டில் களமிறங்கும் புதிய மெகா ஃபேக்டரி…திருச்சிக்கு அடித்தது மெகா ஜாக்பாட்…உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு லக் அடிச்சிருச்சு…ரூ.880 கோடி முதலீட்டில் களமிறங்கும் அமெரிக்க ஜாம்பவான் பெப்சிகோ…
உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் முன்னணி நுகர்வோர் தயாரிப்பு (FMCG) ஜாம்பவனான பெப்சிகோ (PepsiCo) நிறுவனம், தமிழகத்தில் தனது புதிய முதலீட்டைத் தொடங்கவுள்ளது. திருச்சியின் மணப்பாறை பகுதியில் அமைந்துள்ள சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்காவில், தனது அதிநவீன சிப்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான இறுதி கட்ட அரசு அனுமதிகளுக்கு (Clearances) அந்நிறுவனம் தற்போது விண்ணப்பித்துள்ளது. கடந்த சில வருடங்களாகத் தமிழக அரசு மேற்கொண்டு வந்த தொடர் முதலீட்டு ஈர்ப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த மெகா தொழிற்சாலைக்கான ஆரம்பகட்ட நிலப் பணிகள் மற்றும் அனுமதிகள் தற்போது மிக அதிவேகமாகத் தொடங்கியுள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக அரசுடன் பெப்சிகோ நிறுவனம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, மணப்பாறையில் அமையவுள்ள இந்த அதிநவீன உற்பத்தி ஆலைக்காகப் பெப்சிகோ நிறுவனம் சுமார் 880 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டைத் தமிழ்நாட்டில் நேரடியாக இறக்குகிறது. இத்தொழிற்சாலை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், சுமார் 650 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகப் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
திருச்சி மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்காவானது, தற்போது உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மிக முக்கிய முதலீட்டுச் தளமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பெப்சிகோ நிறுவனத்தின் இந்த புதிய முதலீடு வருவதற்கு முன்னதாகவே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சவூதி அரேபியாவின் ‘ஜாமில்’ (Zamil) நிறுவனம் மற்றும் இந்தியாவின் முன்னணி கட்டமைப்பு நிறுவனமான ‘கிர்பி’ (Kirby) ஆகிய நிறுவனங்கள் தங்களின் பிரம்மாண்ட உற்பத்தி தளத்தை இங்கு வெற்றிகரமாக நிறுவி வருகின்றன. இவர்களுடன் இணைந்து வேதிப்பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ‘அல்ட்ராமெரின்’, உலோகத் தயாரிப்பு நிறுவனமான ‘வீயெஸ் அலாய்ஸ்’ மற்றும் வான்வெளி உதிரிபாகத் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் முன்னணி மின்னணு நிறுவனமான ‘ஜாபில்’ (Jabil) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பெருநிறுவனங்கள் தங்களின் அதிநவீனத் தொழிற்சாலைகளை இந்த வளாகத்தில் மிக அதிவேகமாகக் கட்டி எழுப்பி வருகின்றன.
இத்தகைய பெரு நிறுவனங்கள் திருச்சியின் மணப்பாறை சிப்காட் பகுதிக்கு வருவது மூலம், மத்திய மற்றும் கொங்கு மண்டலம் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களைச் சேர்ந்த எளிய நடுத்தரக் குடும்பத்துப் பட்டதாரி இளைஞர்களுக்கு, தங்களின் சொந்த ஊரிலேயே சர்வதேசத் தரம் வாய்ந்த வேலைவாய்ப்புகள் இந்த ஆலைகள் மூலம் உறுதியாகக் கிடைக்கவுள்ளன. மேலும், உருளைக்கிழங்கு உள்ளிட்ட சிப்ஸ் தயாரிப்புக்குத் தேவையான அத்தியாவசிய விவசாய மூலப்பொருட்களைப் பெப்சிகோ நிறுவனம் நேரடியாக இப்பகுதி விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதால், இது கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பன்மடங்கு உயர்த்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
