LATEST NEWS
பார்ட்டியில் ஆடல், பாடல் கொண்டாட்டம்…! சிறுமியுடன் தப்பித்த இளம்பெண்… காரை ஏற்றி கொன்ற கொடூர கும்பல்… பகீர் பின்னணி…!!
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் (பார்), விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஆடல், பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிக்கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த இரு பிரிவினரிடையே திடீரெனப் பயங்கர வாக்குவாதம் வெடித்து மோதலாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சூழல் மோசமடைந்ததால் அந்த இளம்பெண் விடுதியை விட்டு அவசரமாக வெளியேறி, தனக்குத் தெரிந்த ஒரு சிறுமியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார். இதைப் பார்த்த பாரில் இருந்த ஒரு ரவுடி கும்பல், தங்களின் காரை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணை அசுர வேகத்தில் பின் தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளது.
ஒரு கட்டத்தில் அந்த வெறிபிடித்த கும்பல், இளம்பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது தங்களது காரை ஏற்றிப் பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர மோதலின் தாக்கத்தால், அந்த இளம்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த சிறுமி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய உடனே அந்தக் கும்பல் காரில் தப்பியோடிவிட்ட நிலையில், விசாரணையில் பலியான பெண் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
