CRIME
அடச்சீ… மனுஷனா இவன்..? 10 ரூபாய் ஆசை காட்டி 9 வயது சிறுமிக்கு கொடூரம்… 20 இடங்களில் வெட்டி சாய்த்த மிருகத்துக்கு 5 ஆண்டுகளுக்கு பின் தூக்கு..!!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு தாலுகாவிற்கு உட்பட்ட ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி 4ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியை அவரது தாய் பெட்டி கடைக்கு அனுப்பியுள்ளார். அப்போது வழியில் சிறுமியை வழிமறித்த 51 வயதான பிரமோத் ரத்ன கோஷே என்பவன், 10 ரூபாய் நாணயத்தைக் கொடுத்து ஆசை காட்டி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தன் தாயிடம் கூறுவதாகக் கூறி கூச்சலிட்டு தப்பியோட முயன்றபோது, கோஷே வீட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிறுமியைத் துரத்திச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளான். தண்ணீர் தொட்டிக்கு அருகில் சிறுமியின் தலை, கழுத்து, முகம், கைகளில் கடுமையான காயங்களை ஏற்படுத்தியதில், உடலில் 20 இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று சிறுமியைக் காப்பாற்ற முயன்ற விகாஸ் பர்க்யா போலடா என்பவரையும் குற்றவாளி அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் 24 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த நேரடி சாட்சியின் வாக்குமூலம் முக்கிய ஆதாரமாக அமைந்தது. மேலும், தடயவியல் ஆய்வகப் பரிசோதனையில் சிறுமியிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் சிறுமி மற்றும் குற்றவாளியின் டிஎன்ஏ பொருந்திய கலப்பு டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டதுடன், மூடப்பட்ட கடைக்குப் பின்னால் இருந்த புதரில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாளும் மீட்கப்பட்டது. வழக்கு விசாரணையின் முடிவில், ஆபாசக் காணொளிகள் பார்க்கப்பட்ட காலக்கட்டத்தைத் தடயவியல் ஆய்வகத்தால் உறுதியாக நிரூபிக்க முடியாததால் போக்சோ சட்டப்பிரிவு 12-ல் இருந்து குற்றவாளி விடுவிக்கப்பட்டாலும், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன.
இதையடுத்து, வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.ஆர். ரஹானே, குற்றவாளி பிரமோத் ரத்ன கோஷேவுக்கு மரண தண்டனை விதித்து, ரூ.75,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். சிறுமியை ஆசை காட்டி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த இச்சம்பவம் மிகுந்த ஈவிரக்கமற்றது என்றும், குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடூரம் நீதித்துறையின் மனசாட்சியையும், ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
