CRIME
அடக்கொடுமையே…! சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை… நம்பிச் சென்று போர்ச்சுகல் மதுக்கடைக்கு விற்கப்பட்ட இந்தியப் பெண்..! 11 லட்சம் வாங்கி பெண்ணைக் கடத்திய 7 பேர் மீது வழக்குப் பதிவு..!!
ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 28 வயது பெண்ணிடம் புனேவைச் சேர்ந்த ஒரு தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சி ரூ.11 லட்சம் கட்டணமாகப் பெற்றுள்ளது. பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த ஏஜென்சி, அப்பெண்ணைப் போர்ச்சுகல் நாட்டுக்கு அனுப்பி வைத்து மனிதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது.
போர்ச்சுகல் சென்றடைந்ததும், அக்கும்பல் அப்பெண்ணின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்து, அங்குள்ள ஒரு பீர் மதுபானக் கடை உரிமையாளரிடம் அவரை விற்றுள்ளது. அங்கு அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்ததுடன், உடலளவிலும் மனதளவிலும் கடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும், தனது பாஸ்போர்ட்டைத் திரும்பக் கேட்டபோது அக்கும்பல் மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
ஒருவழியாக அப்பெண் இந்தியா திரும்பிய பிறகும், அக்கும்பல் அவரது கணவரைத் தொடர்புகொண்டு வேறு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேலும் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண் புனே குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் மனிதக் கடத்தல், மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புனே மற்றும் போர்ச்சுகலைச் சேர்ந்த 7 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
