CRIME
“ச்சே… மனுஷங்களா இவங்க..?” நடுரோட்டில் பெண்ணைத் தாக்கி ஆடைகளைக் கிழித்த கொடூரம்… உதவிக்கு கதறியும் வேடிக்கை பார்த்த கூட்டம்… தயவுசெஞ்சு வீடியோவைப் பரப்ப வேண்டாம் எனப் பதறும் காவல்துறை..!!
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள அர்தூனா காவல் எல்லைக்குட்பட்ட ஆஜ்னா கிராமத்தில், பெண் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பும், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
வைரல் வீடியோவில், பெருந்திரளான ஆண்களும் பெண்களும் ஒரு பெண்ணைச் சூழ்ந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. அந்தப் பெண்ணை அவர்கள் கொடூரமாகத் தாக்கியது மட்டுமன்றி, பொதுவெளியில் அவமானப்படுத்தும் நோக்கில் அவரது தலைமுடியை வெட்டி, உடைகளையும் கிழித்தெறிந்துள்ளனர். அங்கே பெருந்திரளான மக்கள் கூடியிருந்தபோதிலும், யாரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடியதோடு, உதவி கோரி அலறியும் யாரும் உதவவில்லை.
பகைமை அல்லது தனிப்பட்ட தகராறு காரணமாகவே சிலர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் இவ்வாறு கொடூரமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அர்தூனா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் காணும் பணியிலும், குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அவரது அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த அதிர்ச்சிகரமான வீடியோவை சமூக வலைதளங்களில் மேலும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
