LATEST NEWS
வாக்காளர் பட்டியலில் புதிய சிக்கல்?… தேர்தல் ஆணையத்தின் அதிரடி முடிவுக்கு எஸ்டிபிஐ கடும் எதிர்ப்பு…!!
புதிய வாக்காளர்களை இணைப்பதற்கான இணையவழி ‘படிவம் 6’-ல், விண்ணப்பதாரரின் பெற்றோருடைய தேர்தல் விவரங்களை உள்ளிடுவதை இந்தியத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாட்டிற்கு 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலோ அல்லது இந்திய அரசியலமைப்பிலோ எவ்வித சட்டப்பூர்வமான முகாந்திரமும் இல்லை. முறையான சட்டத் திருத்தங்கள் ஏதுமின்றி, தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக எடுத்துள்ள இந்த முடிவு முற்றிலும் சட்டவிரோதமானது என அக்கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. பைஸி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது ஒரு தனிநபரின் வயது, குடியுரிமை மற்றும் அவர் வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் அடிப்படை உரிமையாகும்; அதனைப் பெற்றோரின் தேர்தல் வரலாற்றுடன் முடிச்சுப் போடுவது ஏற்புடையதல்ல. தற்போதைய சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் மூலம் ஏற்கனவே பல உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நிபந்தனை, முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் இணைய விரும்பும் இளைஞர்கள், விளிம்புநிலை மக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரும் தடையாக அமையும்.
சிஏஏ மற்றும் என்ஆர்சி போன்ற சட்டங்களால் மக்கள் மத்தியில் ஏற்கனவே குழப்பங்களும் அச்சமும் நிலவி வரும் காலகட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அனைவருக்குமான வாக்குரிமையைப் பறிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. எனவே, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்யும் தனது அடிப்படை அரசியல் சாசனக் கடமையை உணர்ந்து, பாகுபாட்டை ஏற்படுத்தும் இந்த புதிய நிபந்தனையைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
