CRIME
“ரேஷன் கார்டுல ஏன் பெயர் சேர்க்கல” கமிஷனரிடம் புகார் கொடுத்ததால் ஆத்திரம்.. 2-வது மனைவியை அடித்துக் கொன்று குழிதோண்டிப் புதைத்த காவலர்.. புதுக்கோட்டையில் பயங்கரம்..!!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி பகுதியைச் சேர்ந்த காவலர் பிரபாகரன், தனது இரண்டாவது மனைவி மௌனிகாவை அடித்துக் கொலை செய்து நிலத்தில் குழிதோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரியலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், மௌனிகா என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
ரேஷன் அட்டையில் குழந்தையின் பெயரைச் சேர்ப்பது தொடர்பாகப் பிரபாகரன் ஆர்வம் காட்டாததால், மௌனிகா இதுகுறித்து காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி மௌனிகாவைத் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று, குடும்பத் தகராறில் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் தனது நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு காலி இடத்தில் உடலைக் குழிதோண்டிப் புதைத்துள்ளார்.
மௌனிகா திடீரென மாயமானதால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பிரபாகரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் காட்டிய இடத்தில் இருந்து மௌனிகாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
