LATEST NEWS
“எஸ்ஐஆர் மட்டும் இல்லையென்றால்.. !” அமைச்சர் ராஜ்மோகன் வெடிக்க வைத்த தேர்தல் மோசடி குண்டு.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் ராஜ்மோகன், தேர்தல் முறையில் இருக்கும் ‘எஸ்ஐஆர்’ என்ற தளம் மட்டும் இல்லையென்றால் தமிழகத்தில் தவெக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் பிறந்தநாள் நிகழ்வுக்குப் பின் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியும் தவெகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போன்றது என்றும், முதல் நாளில் இருந்தே தாங்கள் எஸ்ஐஆர் முறையை எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், பல வாக்காளர்களின் பெயர்களை விடுத்து ‘சிறப்பு எஸ்ஐஆர்’ எனக் கொண்டு வருவது பெரிய மோசடி என்றும், இந்த முறை இல்லாதிருந்தால் தவெக இன்னும் பல தொகுதிகளில் வென்று தங்களைப் போலப் பல அமைச்சர்கள் வந்திருப்பார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அதிமுகவை நம்பித்தான் தவெக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது வெறும் அரசியல் பரப்புரைக்காக மட்டுமே என்று சாடிய அமைச்சர் ராஜ்மோகன், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவும் அதிமுகவும் ஒன்று சேரக்கூடிய நிலைக்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டார். இதனால் நல்ல தலைமையை நாடி மரகத குமரவேல் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் குறித்த இணையதள ஊகங்களுக்குப் பதிலளித்த அவர், தங்களுக்குத் தளபதி பார்த்துப் பார்த்துப் பொறுப்பு கொடுத்துள்ளதாகவும், அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் விஜய்தான் இறுதி முடிவு எடுப்பார் என்றும் கூறி பேட்டியை நிறைவு செய்தார்.
