LATEST NEWS
அடேங்கப்பா..! 62 லட்சம் பழைய போனை வச்சு இப்படி ஒரு காரியமா..? ஜப்பானை அடிச்சுக்க ஆளே இல்லப்பா..!!
டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை முற்றிலும் சுற்றுச்சூழல் நட்புடன் நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டது. இதன் ஒரு பகுதியாக, “டோக்கியோ 2020 மெடல் புராஜெக்ட்” என்ற புதிய முயற்சியைத் தொடங்கியது. இதற்காக ஜப்பான் நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடம் இருந்து பயன்படாத மின்னணு சாதனங்கள் சேகரிக்கப்பட்டன. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை நடைபெற்ற இந்தச் சேகரிப்பு இயக்கத்தில் ஜப்பான் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் பழைய கைபேசிகள் மற்றும் பிற சிறிய மின்னணுப் பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.
இந்த சேகரிப்பு முயற்சியின் மூலம் சுமார் 62.1 லட்சம் பழைய மொபைல் போன்கள் உட்பட மொத்தம் 78,983 டன் எடையுள்ள மின் கழிவுகள் மக்களிடம் இருந்து பெறப்பட்டன. சேகரிக்கப்பட்ட சாதனங்களில் இருந்து நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய உலோகங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இவ்வாறு மறுசுழற்சி முறையைப் பயன்படுத்தி சுமார் 32 கிலோ தங்கம், 3,500 கிலோ வெள்ளி மற்றும் 2,200 கிலோ வெண்கலம் வெற்றிகரமாகப் பெறப்பட்டது.
பிரித்தெடுக்கப்பட்ட இந்த மறுசுழற்சி உலோகங்களைக் கொண்டு டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேவையான சுமார் 5,000 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் தயாரிக்கப்பட்டன. ஒலிம்பிக் வரலாற்றிலேயே போட்டிக்கான அனைத்துப் பதக்கங்களும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட மின் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஜப்பானின் இந்த புதுமையான முயற்சி உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றதோடு, மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்தது.
