LATEST NEWS
முதலமைச்சருக்கு வீண் புகழ்ச்சி பிடிக்காது.. அப்படி பேசாதீங்க… தவெக MLA-வுக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு.. சட்டப்பேரவையில் பரபரப்பு..!!!
தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை அக்கட்சியின் நாங்குநேரி எம்எல்ஏ வெ.நாராயணன் தொடர்ந்து புகழ்ந்து பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. தனது உரையின் தொடக்கத்தில் சுமார் 6 நிமிடங்கள் வரை அவர் முதலமைச்சரைப் பாராட்டிப் பேசினார். இதையடுத்து, மானியக் கோரிக்கை விவகாரங்கள் தொடர்பாக மட்டுமே பேசுமாறு நாராயணனிடம் அறிவுறுத்துமாறு, முதலமைச்சர் விஜய் சபாநாயகருக்கு துண்டுச்சீட்டு (Note) ஒன்றின் மூலம் எழுதி அனுப்பினார். இதை அவையில் வாசித்த சபாநாயகர், “முதலமைச்சருக்கு வீண் புகழ்ச்சி பிடிக்காது” என்று சுட்டிக்காட்டினார்.
சபாநாயகர் அறிவுறுத்திய பின்னரும் நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவரது சொந்தக் கட்சியான தவெக உறுப்பினர்களே அவரை நோக்கி, “அப்படி பேசாதீங்க” என வெளிப்படையாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். முதலமைச்சருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்ற விதியையும் மீறி, சொந்தக் கட்சி எம்எல்ஏவின் பேச்சுக்கே தவெக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த இந்தச் சம்பவம் சட்டப்பேரவை வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
