LATEST NEWS
“நெருப்புடன் விளையாடாதீர்கள்” ஈரானுக்கு உதவினால் வரலாறு காணாத பொருளாதாரப் போர்.. டொனால்ட் டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் பொருளாதாரத்தைக் குறிவைத்து ஒரு புதிய பிரம்மாண்டமான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அல்லது அதற்கு ஏதேனும் ஒரு வழியில் உதவும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக கடுமையான பொருளாதாரத் தண்டனைகள் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான போர் தொடங்கி தற்போது 6 மாதங்களை நெருங்கி வரும் நிலையில், எந்தவொரு தற்காலிக இராஜதந்திர அல்லது ராணுவ தீர்வும் எட்டப்படாத சூழலில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஒரு நாட்டிற்கு எதிராக இதுவரை எடுக்கப்படாத மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை இன்று நான் அறிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்கும் நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகளை அனுமதிக்கும் எந்தவொரு நாடும் வரலாறு காணாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை ஈரான் தொடர்ந்து முடக்கி வரும் நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முறிந்துவிட்டதாக டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், இந்த நீரிணையை அமெரிக்காவின் புதிய பகுதியாக மாற்றலாம் என்றும் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த விவகாரம் அங்கு பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
