LATEST NEWS
வெடித்தது மோதல்..! “உங்க அப்பன், பாட்டன் வந்தாலும் சரி அடுத்த MLA நான்தான்” முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு மூத்த அமைச்சர் மகள் விடுத்த பகீர் சவால்..!!
தெலங்கானா காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல், மூத்த அமைச்சரின் மகள் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு விடுத்த பகிரங்க சவாலால் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சர் கொண்டா சுரேகாவின் மகளும், பர்கால் தொகுதி காங்கிரஸ் சீட் Aspirant-முமான கொண்டா சுஷ்மிதா முதலமைச்சருக்கு எதிராக அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பர்கால் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ரேவூரி பிரகாஷ் ரெட்டிக்கு ஆதரவாக முதலமைச்சர் பேசியதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பர்காலில் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மிதா, “சீட் ஒதுக்க இரண்டு ஆண்டுகள் ஏன் காத்திருக்க வேண்டும்? தற்போதைய எம்எல்ஏவை இப்போதே ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடச் சொல்லுங்கள்” என்று சவால் விடுத்துள்ளார். மேலும், “நீங்களோ, உங்கள் அப்பாவோ அல்லது உங்கள் தாத்தாவோ வந்தாலும் சரி, பர்காலின் அடுத்த எம்எல்ஏ நான்தான்” என ஆவேசமாகப் பேசியுள்ளார். காங்கிரஸ் சீட் தராவிட்டாலும் சுயேச்சையாகப் போட்டியிடத் தயார் என்று அறிவித்த அவர், முதலமைச்சரின் சகோதரருக்குத் தொடர்புடைய 200 கோடி ரூபாய் நில ஊழல் புகாரையும் பொதுவெளியில் கிளப்பியுள்ளார்.
முதலமைச்சருக்கு எதிராக அமைச்சரின் மகளே இத்தகைய கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கட்டுப்படுத்த களமிறங்கியுள்ள மாநில காங்கிரஸ் ஒழுங்குநடவடிக்கைக் குழு, தனது மகள் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து 3 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு அமைச்சர் கொண்டா சுரேகாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தெலங்கானாவில் “பழைய காங்கிரஸ் Vs புதிய காங்கிரஸ்” என்ற அதிகாரப் போட்டி இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
