LATEST NEWS
ச்சே..! 22 நாட்கள்… 1000 கிலோ குப்பை.. அரசு செய்யாததை தனியாக நின்று சாதித்த 19 வயது இளைஞன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் மாவூவைச் சேர்ந்த 19 வயதான கார்த்திக் சஹானி, தன் குடும்பத்தின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் தம்சா நதி கழிவுகளால் நிறைந்து வருவதைக் கண்டு வேதனை அடைந்தார். இதனால், அரசு அல்லது எந்தவொரு அமைப்பின் உதவிக்காகவும் காத்திருக்காமல், அவரே நேரடியாக நதியில் இறங்கிச் சுத்தம் செய்ய முடிவு செய்தார். இன்ஸ்டாகிராமில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்ட கார்த்திக், நாள்தோறும் சுமார் 3 முதல் 4 மணி நேரத்தை இந்தச் தூய்மைப் பணிக்காகச் செலவிட்டார்.
தொடர்ந்து 22 நாட்கள் தனது சொந்தக் கைகளாலேயே தண்ணீரில் மிதந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பல்வேறு கழிவுகளைச் சேகரித்து வெளியேற்றினார். இந்த 22 நாட்களில் அவர் நதியிலிருந்து 1,000 கிலோவிற்கும் அதிகமான கழிவுகளை அகற்றியுள்ளார். தம்சா நதியின் நீர் கார்த்திக்கின் குடும்ப நிலங்களின் பாசனத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதால், நதி மாசடைவது அவர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் சூழல் இருந்தது. அதனால் வெறுமனே புகார் கூறுவதோடு நிறுத்தாமல், தொடர்ந்து களத்தில் இறங்கிச் செயல்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
https://www.instagram.com/reel/DeCKQWHu1O-/?utm_source=ig_web_button_share_sheet
தம்சா நதியைச் வெற்றிகரமாகச் சுத்தம் செய்து முடித்த கார்த்திக், தற்போது தனது அடுத்து இலக்காகத் தன் பகுதியில் உள்ள ஒரு குளத்தைச் சுத்தம் செய்யும் பணியை கையில் எடுத்துள்ளார். 19 வயதில் தினமும் மணிநேரக் கணக்கில் கழிவுகளை அகற்றுவது எளிதான காரியமல்ல என்றாலும், மாற்றத்தைத் தொடங்க பெரிய அளவிலான இயக்கங்கள் தேவையில்லை, ஒரு சிறிய முயற்சி போதும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். இவரது இந்த முயற்சியைப் பலரும் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
