LATEST NEWS
“உயிருக்கே ஆபத்து… காலம் தாழ்த்துவதற்கு முன் காப்பாற்றுங்கள்!” நீதிபதிகளுக்கு இம்ரான் கான் உருக்கமான கடிதம்…!!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் தலைமை நீதிபதிகளுக்கு எழுதியுள்ள திறந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடியாலா சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனக்கு மூளை ரத்தக்கசிவு அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அக் கடிதத்தில் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது இரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், சிறைத்துறை நிர்வாகம் உரிய மருத்துவ உதவிகளை மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னைப் போலவே தனது மனைவியான புஷ்ரா பிபியின் உடல்நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளதாக இம்ரான் கான் வேதனை தெரிவித்துள்ளார். கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உரிய அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவர் தனது பார்வையை முழுமையாக இழக்க நேரிடும் என்றும், முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மறுக்கப்படுவது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க உயிரோடு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், மனிதாபிமான அடிப்படையில் நீதிமன்றங்கள் உடனடியாகத் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் எனத் கோரிக்கை விடுத்துள்ளார். தாமதித்தால் தான் உயிருடன் திரும்ப முடியாத நிலை ஏற்படலாம் என்று எச்சரித்துள்ள அவர், “காலம் தாழ்த்துவதற்கு முன்பாக எனக்கு நீதி வழங்குங்கள்” என்று நீதிபதிகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
