LATEST NEWS
“ரூ.2 கோடிக்கு மேல் உள்ள டெண்டரில் 15 நாட்கள் மட்டுமே அவகாசம்” மொத்த மதிப்பீடு ஏன் ரகசியம்..? முதலமைச்சர் அலுவலக டெண்டர் ஆவணங்களில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்..!!
தமிழக முதலமைச்சர் அலுவலகப் பணிக்கான புதிய டெண்டர் ஒதுக்கீட்டில் அடுக்கடுக்கான விதிமீறல்கள் நடந்துள்ளதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் அதில் விரிவாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதலாவதாக, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நாளிதழ்களில் இது தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்ட போதிலும், 4 நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 17ஆம் தேதிதான் டெண்டர் ஆவணங்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. மேலும், ₹2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள டெண்டர்களைச் சமர்ப்பிக்க விதிகளின்படி 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலை உள்ள சூழலில், இந்த டெண்டருக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது விதிமீறல் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றுடன், டெண்டர் ஆவணங்களை இணையதளத்தில் வெளியிடும் போதே அதன் மொத்த மதிப்பீட்டுத் தொகையையும் சேர்த்து வெளியிட வேண்டும் என்பது கட்டாய விதியாகும். ஆனால், இந்த டெண்டர் வெளியிடப்பட்டு இத்தனை நாட்களாகியும் அதன் மொத்த மதிப்பு இதுவரை இணையதளத்தில் அறிவிக்கப்படவில்லை என அடுக்கடுக்கான புகார்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
