LATEST NEWS
அதிகாலையிலேயே சோகம்..! திறந்து கிடந்த மழைநீர் வடிகால் பள்ளம்… தலையில் குத்திய இரும்புக் கம்பி.. 25 வயது இளைஞர் துடிதுடித்து பலி – உறவினர்கள் கதறல்..!!
சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மதுரவாயல் புறவழிச் சாலை சர்வீஸ் சாலையில், எவ்விதப் பாதுகாப்புத் தடுப்புகளும் இன்றித் தோண்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (25) என்பவர், பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்ததும் அவர் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை வழியாக நூம்பல் நோக்கித் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அந்தச் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காகப் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. ஆனால், அங்கு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக எவ்வித முன்னெச்சரிக்கை தடுப்புகளோ அல்லது எச்சரிக்கைப் பலகைகளோ வைக்கப்படவில்லை. மேலும், அந்தப் பகுதியில் சாலையோர மின்விளக்குகளும் எரியாததால் கடும் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளம் இருப்பதை அறியாமல் வேகமாக வந்த ஹரிபிரசாத், எதிர்பாராதவிதமாக தனது இருசக்கர வாகனத்துடன் அந்த ஆழமான பள்ளத்திற்குள் தலைகுப்புற விழுந்துள்ளார்.
அங்கு கட்டுமானப் பணிகளுக்காக நடப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் அவரது தலையில் பலமாக ஆழமாகக் குத்தியுள்ளன. இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அவரது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நபர் இதைக் கண்டு அதிர்ந்து போய் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், ஏணி மூலமாகப் பள்ளத்தில் இறங்கி ஹரிபிரசாத்தின் உடலை மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத மாநகராட்சிப் பள்ளங்கள் மற்றும் சாலைகளில் தொடரும் அலட்சியப் போக்கு காரணமாக அப்பாவி இளைஞரின் உயிர் பறிபோயுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அண்ணா நகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிரமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
