CRIME
ஃபேஸ்புக் ‘ஏஞ்சல்’ கொடுத்த ஷாக்.. 70 வயது முதியவரிடம் ரூ.38 லட்சத்தை சுருட்டிய 26 வயது வாலிபர்.. பரபரப்பு பிண்ணனி..!!
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 70 வயது ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர், முகநூலில் வந்த ஒரு பெண்ணின் நட்புக்கான அழைப்பை ஏற்றதால், சுமார் 38 லட்சம் ரூபாயை சைபர் குற்றவாளிகளிடம் இழந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணக்கில் இருந்து வந்த மெசேஜ்களைப் பார்த்து, அதை உண்மை என்று நம்பி அவர் பழகத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் குடும்பச் செலவுகளுக்கு என்று கூறி பணம் வாங்கிய அந்த நபர், பின்னர் தனது பேச்சை ஆபாசமான முறையில் மாற்றி, முதியவரைத் தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அந்த நபர் ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, அவர் மீது பொய் வழக்கு தொடரப்போவதாக மிரட்டி, மிரட்டல் மூலம் 38 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் கடந்த ஜூன் 17, 2025 அன்று ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவரைக் கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்களைப் பறிமுதல் செய்தனர். அந்த வாலிபரே பெண்ணின் பெயரில் போலி கணக்கு தொடங்கி முதியவரை ஏமாற்றியது தெரியவந்தது.
இத்தகைய சைபர் மோசடி கும்பல்கள் முதியவர்களைக் குறிவைத்து, இளம் பெண்களின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி ஏமாற்றுவதாகப் போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே, முதியவர்கள் தங்களுக்குத் தெரியாத நபர்களின் நட்புக்கான அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், ஆன்லைனில் பழகும் முன்பின் தெரியாத நபர்களுக்குப் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சைபர் மோசடிகளுக்கு ஆளாக நேரிட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
