LATEST NEWS
ரயில் பயணிகளே உஷார்…! ரயிலில் எவ்வளவு கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்லலாம்…? ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…!!
இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களின் பெட்டிகளுக்குள் இலவசமாக எடுத்துச் செல்லக்கூடிய உடைமைகளின் எடை வரம்பை ரயில்வே நிர்வாகம் தெளிவாக வகுத்துள்ளது. இதன்படி, குளிர்சாதன முதல் வகுப்பில் பயணிப்போர் 70 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் 50 கிலோ வரையிலும் கட்டணமின்றி பொருட்களைக் கொண்டு செல்லலாம். சாதாரண படுக்கை வசதி மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு 40 கிலோ வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப் பெட்டி பயணிகளுக்கு 35 கிலோ வரை மட்டுமே இலவச லக்கேஜ் எடுத்துச் செல்ல சட்டப்படி இடம் உண்டு.
இந்த எல்கையைத் தாண்டி கூடுதல் எடையுடன் பயணிக்கும் பட்சத்தில், ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பார்சல் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் ரயிலில் பயணிக்கும்போது சோதனையில் அளவுக்கு அதிகமான லக்கேஜ் இருப்பது கண்டறியப்பட்டால், சாதாரண கட்டணத்தை விட 6 மடங்கு வரை அபராதம் வசூலிக்கப்படும். அத்துடன், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய அட்டைப்பெட்டிகளையோ அல்லது ஆபத்தான வெடிபொருட்களையோ ரயிலுக்குள் கொண்டு செல்லக் கூடாது என்றும் ரயில்வே துறை எச்சரித்துள்ளது.
