LATEST NEWS
மோடி, நிர்மலா சீதாராமனுடன் மட்டுமே சந்திப்பு… கூட்டணியில் விரிசலா…தளபதி விஜய்யின் டெல்லி கணக்கு…காங்கிரஸ் தலைவர்களை ஏன் பார்க்கவில்லை… டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விஜய்யின் ‘சைலண்ட்’ கேம்…!
தமிழக முதலமைச்சர் விஜய் தனது இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திக்காமல் திடீரென சென்னை திரும்புவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வரும் சூழலில், இன்று காலை 10 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்த இந்த முக்கிய சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பை முன்னிட்டு டெல்லியில் முதலமைச்சர் விஜய்யை வரவேற்கப் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில், சந்திப்பு ரத்து செய்யப்பட்டது கூட்டணி கட்சியினரிடையே பெரும் ஏமாற்றத்தையும், அரசியல் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவும் முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அசாம் மாநிலப் பாதுகாப்புப் பணிகள் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க வேண்டியிருந்ததால் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், அதே குறிப்பிட்ட நேரத்தில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசனை அமித் ஷா நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் வெளியாகியிருப்பது, தமிழக முதலமைச்சரின் சந்திப்பு ஏன் தவிர்க்கப்பட்டது என்ற புதிய கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதனால், தவெக தரப்பில் முறைப்படி அனுமதி கோரப்படவில்லையா அல்லது அனுமதி மறுக்கப்பட்டதா என்ற விவாதங்கள் டெல்லி வட்டாரத்தில் தீவிரமடைந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லி பயணத்தில், அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரை மட்டுமே நேரில் சந்தித்துள்ளார். பிரதமருடனான 10 நிமிட ஆலோசனையில் தமிழ்நாட்டின் முக்கியத் தேவைகள் குறித்த 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் வழங்கியுள்ளார். தொடர்ந்து நிதி அமைச்சருடன் 25 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் மாநிலத்தின் நிதித் தேவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடனான சந்திப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அடுத்த வாரம் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
