LATEST NEWS
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!” -கர்நாடகா, தமிழக அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் இறுதி எச்சரிக்கை..காவிரி பிரச்சினையில் அனல் பறக்கும் அரசியல் களம்!
கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய காவிரி நீரை வழங்காமல் சர்வாதிகாரப் போக்குடனும், அதிகார மமதையுடனும் நடந்துகொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுகள் இருந்தபோதிலும், அவற்றை மதிக்காமல் தொடர்ந்து அவமதிக்கும் வகையில் கர்நாடக ஆட்சியாளர்கள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பல டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மக்களின் அடிப்படை குடிநீர்த் தேவைக்கும் காவிரி நீரே முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில், தமிழகத்தின் உரிமையை மறுத்து, தண்ணீர் தர முடியாது என கர்நாடக அமைச்சர்கள் கூறுவது வடிகட்டிய பொய் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், கர்நாடகாவின் தற்போதைய பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் அங்கு வாழும் தமிழர்களின் கடின உழைப்பு அடங்கியுள்ளது என்பதை அம்மாநில முதல்வர் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஆளும் மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, கர்நாடக அரசிடம் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான உரிய தண்ணீரை உடனடியாகப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்குரிய நீரைத் திறந்து விடத் தொடர்ந்து மறுத்தால், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்குவோம் என்று கூட்டணிக் கட்சியான காங்கிரஸை ஆளும் அரசு எச்சரிக்கத் தயாரா? என அவர் பகிரங்க சவால் விடுத்துள்ளார். மேலும், கடமையில் இருந்து தவறி மக்களுக்கு அநீதி இழைக்கும் ஆட்சியாளர்களைத் தர்மமே எமனாக மாறித் தண்டிக்கும் என்ற அறநெறியை மேற்கோள்காட்டி, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு அவர் தனது கடுமையான எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளார்.
