DISTRICT NEWS
விபத்தா? அலட்சியமா? 6 டன் அமோனியா அகற்றம்.. நள்ளிரவில் பூட்டப்பட்ட கடல் உணவு ஆலை..18 பெண்கள் பலியான விவகாரத்தில் அதிரடி காட்டிய கலெக்டர்..!!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 21-ஆம் தேதி நடந்த இந்த கோர விபத்தில், அங்கு பணிபுரிந்து வந்த 18 வடமாநிலப் பெண் தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 11 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரமான சம்பவத்திற்குப் பொறுப்பான ஆலை உரிமையாளர்கள், மேலாளர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் ஆபத்தைத் தவிர்க்கும் வகையில் ஆலையில் இருந்த சுமார் 400 டன் கடல் உணவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் அமோனியா வாயு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்னை சி.பி.சி.எல் நிறுவனத்திற்குப் பாதுகாப்பாக மாற்றப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில், வருவாய் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் ஒன்றுதிரண்டு, தொழிற்சாலையின் அலுவலகம், குடோன், குடியிருப்புகள் என 5 முக்கியப் பகுதிகளுக்கு நேற்று மாலை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்தனர்.
