CRIME
“சைடு பிசினஸ் செய்த பெண் போலீஸ்.. நம்பிப் போன காவலர் குடும்பங்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. சென்னையை உலுக்கிய ரூ.20 கோடி தங்கக் காசு மோசடி”..!!
சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஷீலாமேரி, சந்தையில் விற்கும் விலையை விடக் குறைவான விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்தும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்தும் சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஷீலாமேரியின் காரோட்டியும் உறவினருமான பிரபுமணி ஏற்கனவே கைதான நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், இவருடைய முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொடுங்கையூரில் தனியார் நிறுவனம் நடத்திய பிரபுமணி, சென்னை நகை வியாபாரி ஒருவரிடம் தங்கக் காசுகளை வாங்கி, இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி மூலமாக பலருக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதில் நல்ல லாபம் கிடைத்ததால், கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் இதையே ஒரு பகுதிநேரத் தொழிலாகச் செய்துள்ளனர்.
இன்ஸ்பெக்டரின் காரிலேயே சென்று காவலர் குடியிருப்புகளில் 3 விதமான தங்கத் திட்டங்கள் இருப்பதாகக் கூறி, செயலி வாயிலாகவும், நேரடியாகவும் மாதந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.20 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலரும் கமிஷனுக்காக ஆட்களைச் சேர்த்து விட்டுள்ளனர். ஒரு போலீஸ் துணை கமிஷனரும் இதில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். இவர்கள் பொதுமக்களிடம் வசூலித்த மொத்தப் பணத்தையும் சென்னையைச் சேர்ந்த ஒரு பெரிய நகை வியாபாரியிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அந்த வியாபாரி தங்கக் காசுகளைக் கொடுக்காமல் இவர்களை ஏமாற்றியதால், இவர்களாலும் பொதுமக்களுக்கு தங்கக் காசுகளைக் கொடுக்க முடியாமல் போனது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட துணை கமிஷனருக்கு மட்டும் பணத்தைத் திருப்பித் தந்துள்ளனர். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
