CRIME
“காதலிக்கலனா கொன்னுடுவேன்..! பிளஸ் 1 மாணவிக்குச் சரமாரி கத்திக்குத்து… போலீசுக்கு பயந்து வாலிபர் செய்த பகீர் காரியம்..!!”
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் என்ற எலக்ட்ரீசியன், அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர் பலமுறை தனது காதலைத் தெரிவித்தபோதிலும், அம்மாணவி அதை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த அய்யப்பன், நேற்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அங்கு சென்று மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தித் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மாணவி அவரது மிரட்டலுக்குப் பயப்படாமல் காதலிக்க முடியாது என்று உறுதியாகக் கூறியதால், ஆத்திரமடைந்த அய்யப்பன் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மாணவியின் கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததைக் கண்ட அய்யப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த மாணவியை மீட்டு சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அய்யப்பனைத் தேடி வந்த நிலையில், சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்குவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியபோது, மாணவியைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய அய்யப்பன், போலீசாரிடம் பிடிபடுவோம் என்ற பயத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
