LATEST NEWS
“கர்நாடகாவிடம் கெஞ்சுவதா..? நேரடியா போனா எல்லாம் வீணாயிடும்..! முதல்வர் விஜய்யை நோக்கி துரைமுருகன் தொடுத்த ‘காவிரி’ ஏவுகணை..!!”
தமிழகத்திற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கக் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. போதிய மழை இல்லை என்ற காரணத்தைக் கூறி கர்நாடகம் தண்ணீர் திறக்காததால், தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டக் கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.
இந்தச் சூழலில், காவிரி நீர்ச் சிக்கல் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசுவதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. அங்கு கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரைச் சந்தித்து, தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரைப் பெறுவது குறித்தும், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நேரடியாக விவாதிக்க உள்ளதாகக் கூறப்பட்டது.
முதலமைச்சரின் கர்நாடகப் பயணம் குறித்துப் பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், “நம்மிடம் உச்சநீதிமன்ற உத்தரவு இருக்கும்போது நாம் ஏன் அங்கு சென்று கெஞ்ச வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார். காவிரிப் பிரச்சினைக்கு மேலாண்மைக் குழு மற்றும் ஒழுங்காற்றுக் குழுவைத்தான் நாட வேண்டும் என்றும், நேரடியாகச் சென்று பேசுவது நீதிமன்ற உத்தரவை வீணாக்கிவிடும் என்றும் அவர் விமர்சித்தார். மேலும், காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சிகளைக் கூட்டி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
