LATEST NEWS
தமிழர்கள் என்றாலே இளக்காரமா போச்சா..? கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கொந்தளித்த காங்கிரஸ் எம்எல்ஏ..!!
கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, “தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்டது” என்று காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் தமிழக சட்டப்பேரவையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அவர், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கண்டனம் தெரிவித்தார்.
கர்நாடக அரசின் இந்த கொடூரமான நடவடிக்கையைக் கடுமையாகச் சாடிய அவர், உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு அந்நில அரசு தற்பொழுது வழங்கியுள்ள நிதியுதவி மற்றும் இழப்பீடு எந்த வகையிலும் போதுமானது அல்ல என்று குறிப்பிட்டார். எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகுதியான அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முறையான நீதி கிடைக்கச் செய்யவும் இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் தளத்தில் தற்பொழுது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
