LATEST NEWS
திடுக்கிடும் சம்பவம்..! சூரத்தில் ஹோட்டல் உணவு சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி.. பெற்றோர் உட்பட 4 பேர் தீவிர சிகிச்சை..! சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உணவகத்திலிருந்து வாங்கிச் சாப்பிட்ட உணவு விஷமானதால், 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது பெற்றோர் மற்றும் இரு சகோதரிகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சூரத்தின் வராச்சா பகுதியில் உள்ள ரனுஜாதாம் சொசைட்டியைச் சேர்ந்த அசோக்பாய் கல்சாரியா என்பவர், கடந்த ஆகஸ்ட் 15 இரவன்று ‘ஷீத்தல் ரெஸ்டாரண்ட்’ என்ற ஹோட்டலில் இருந்து முந்திரி பண்ணீர் கிரேவி உள்ளிட்ட பஞ்சாபி உணவுகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த உணவைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, அதாவது ஆகஸ்ட் 16 அதிகாலை 4 மணி அளவில், குடும்பத்தினருக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நிலைமை சீரடையாததால், ‘சாத்விச்சார்’ என்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குச் சிகிச்சை பலனின்றி ஆர்யா என்ற 5 வயது சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தை ஆய்வு செய்து மூட உத்தரவிட்டுள்ளனர். மேலும், சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கை வந்தவுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
