LATEST NEWS
இப்படியொரு நல்லவங்களா..? நள்ளிரவு 3 மணிக்கு ஆட்டோ ஓட்டும் பெண்..! மருத்துவ அவசரத்திற்கு இலவசம்… 50 பெண்களுக்கு வாழ்வளித்த தம்பதி.. பாராட்டும் இணையவாசிகள்..!!
குஜராத்தின் வடோதரா நகரைச் சேர்ந்த ஒரு பெண், நள்ளிரவில் ஆட்டோ ஓட்டி தன் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதோடு, அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு இலவச சேவை வழங்கி இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார். இன்ஸ்டாகிராம் பயனர் சன்யம் கர்க் என்பவர் நள்ளிரவு 3 மணியளவில் வீட்டிற்குத் திரும்பும்போது, சாலையில் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுவதைக் கண்டு வியந்து அவரிடம் பேசியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பை அவர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.
அந்தப் பெண்ணின் ஆட்டோவில், “இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மருத்துவ அவசர நிலைக்காகவோ அல்லது மருத்துவமனைக்குச் செல்லவோ வேண்டும் என்றால் கட்டணம் ஏதுமின்றி சேவை முற்றிலும் இலவசம்” என்ற அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் வாகனங்கள் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு எவ்வித சுயநலமுமின்றி இவர் உதவி செய்து வருகிறார். முன்பு ஆட்டோ ஓட்டுநராக இருந்த இவரது கணவர், சமூகத்தின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தன் மனைவிக்கு ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்து, அவரைச் சுயசார்புடையவராக மாற்ற முழு ஆதரவாக இருந்துள்ளார்.
இரண்டு குழந்தைகள் கொண்ட இந்தக் குடும்பத்தில் கணவரின் ஊக்கத்தோடு களமிறங்கிய அப்பெண், தான் மட்டும் முன்னேறாமல் இதுவரை சுமார் 50 பிற பெண்களுக்கும் ஆட்டோ ஓட்டப் பயிற்சி அளித்து அவர்களின் சுயசார்பு வாழ்க்கைக்கு உதவியுள்ளார். இந்தத் தம்பதியை ‘பவர் கப்பிள்’ என்று பாராட்டியுள்ள நெட்டிசன்கள், நள்ளிரவிலும் பெண்கள் அச்சமின்றிப் பணியாற்றக்கூடிய வடோதரா நகரத்தின் பாதுகாப்பான சூழலையும், அப்பெண்ணின் சேவை மனப்பான்மையையும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
